பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது


பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது
x
தினத்தந்தி 6 Aug 2018 2:43 PM GMT (Updated: 6 Aug 2018 2:43 PM GMT)

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகைசெய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.


புதுடெல்லி, 

தேசிய எஸ்.சி. ஆணையம், தேசிய பழங்குடியினர் ஆணையம் ஆகியவற்றுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், 
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா கடந்த 2–ந் தேதி, மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர், மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா இன்று மாநிலங்களவையில் எடுக்கப்பட்டது. விவாதம் நடைபெற்ற போது, மத்திய சமூக நீதித்துறை மந்திரி தாவர் சந்த் கெலாட் பேசுகையில், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக மக்களுக்கு நீதி வழங்கும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக இம்மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது. 

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ஒரு பெண் உறுப்பினரை நியமிக்க விதிமுறைகளில் புதிய ‌ஷரத்து சேர்க்கப்படும். மிகவும் பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படுவார். இந்த விவகாரத்தில், மாநிலங்களின் உரிமைகளில் தலையிட மாட்டோம். மாநிலங்கள் தனியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை வைத்துக்கொள்ளலாம். மத்திய அரசும் தனியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை வைத்துக்கொள்ளும்.

 மத்திய பட்டியலில் ஏதேனும் ஒரு சாதியை சேர்க்க மாநிலங்கள் விரும்பினால், மசோதா மூலம் அந்த சாதி சேர்த்துக்கொள்ளப்படும் என்றார். 

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. அவையில் இருந்த 156 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதன்மூலம், இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்றுள்ளது. 


Next Story