மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் 9-ந்தேதி நடக்கிறது - வெங்கையா நாயுடு தகவல்


மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் 9-ந்தேதி நடக்கிறது - வெங்கையா நாயுடு தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 10:45 PM GMT)

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் 9-ந்தேதி நடைபெற உள்ளதாக வெங்கையா நாயுடு தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. தற்போது காலியாக இருக்கும் அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த தேர்தல் நாளை மறுநாள் (9-ந் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறும் என அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த தேர்தலுக்கான வேட்புமனு 8-ந் தேதி (நாளை) முற்பகலுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

துணைத்தலைவர் பதவிக்கு ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சிகளோ இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எனினும் இந்த பதவியை கைப்பற்ற பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.

இதைப்போல சுமார் 40 ஆண்டுகளாக இந்த பதவியை கைவசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியும், மீண்டும் அதை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதேநேரம் கடந்த மாதம் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. வந்தனா சவானை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொது வேட்பாளராக நிறுத்த பரிசீலனை நடந்து வருவதாகவும் தெரிகிறது.

Next Story