காப்பகத்திலிருந்து மாயமான சிறுமிகள் இன்னும் 48 மணி நேரங்களில் கண்டுபிடிக்கப்படுவார்கள் - உ.பி. மந்திரி


காப்பகத்திலிருந்து மாயமான சிறுமிகள் இன்னும் 48 மணி நேரங்களில் கண்டுபிடிக்கப்படுவார்கள் - உ.பி. மந்திரி
x
தினத்தந்தி 7 Aug 2018 11:33 AM GMT (Updated: 7 Aug 2018 11:33 AM GMT)

காப்பகத்திலிருந்து மாயமான சிறுமிகள் இன்னும் 48 மணி நேரங்களில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என உத்தரபிரதேச மந்திரி கூறியுள்ளார்.



லக்னோ,

உத்தரபிரதேசத்தின் தியோரியாவை சேர்ந்த மோகன் திரிபாதி, அவரது மனைவி கிரிஜா திரிபாதி ஆகியோர், அங்கு ஒரு காப்பகத்தை நடத்தி வந்தனர். அதில் மொத்தம் 42 சிறுமிகள் தங்கி இருந்தனர். இந்த சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

அந்த காப்பகத்தில் இருந்து தப்பி வந்த ஒரு சிறுமி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று இந்த தகவலை தெரிவித்தார். அங்குள்ள சிறுமிகள் தினமும் இரவில் கார்களில் வெளியே அழைத்து செல்லப்படுவதாகவும், பின்னர் காலையில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறிய அந்த சிறுமி, இந்த சிறுமிகள் இரவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுவதாகவும் போலீசாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அதிரடியாக களமிறங்கிய போலீசார், அந்த காப்பகத்தில் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அங்கே தங்கி இருந்த 24 சிறுமிகளை அவர்கள் மீட்டனர். மீதமுள்ள 18 சிறுமிகளை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காப்பகத்தை நடத்தி வந்த மோகன் திரிபாதி, கிரிஜா திரிபாதி மற்றும் காப்பக கண்காணிப்பாளர் காஞ்சன்லதா ஆகியோரை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாயமான சிறுமிகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ரீட்டா பகுகுணா பேசுகையில், சிறுமிகள் எங்கிருக்கிறார்கள் என்பது போலீசுக்கு இன்னும் தெரியவரவில்லை, விசாரணையும், தேடுதலும் தொடர்ந்து நடக்கிறது. இன்னும் 48 மணி நேரங்களில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 


Next Story