சுவிட்சர்லாந்தில் இருந்து கருப்பு பண டெபாசிட்டுகள் பற்றி 10 நாளில் தகவல் வரும்


சுவிட்சர்லாந்தில் இருந்து கருப்பு பண டெபாசிட்டுகள் பற்றி 10 நாளில் தகவல் வரும்
x
தினத்தந்தி 7 Aug 2018 8:45 PM GMT (Updated: 7 Aug 2018 8:45 PM GMT)

சுவிட்சர்லாந்தில் இருந்து கருப்பு பண டெபாசிட்டுகள் பற்றி 10 நாளில் தகவல் வரும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்தியில் அமைந்து உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு, வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் பற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கருப்பு பணத்தை தடுப்பதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அப்படி வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ள கருப்பு பணம் பற்றி அதிகாரபூர்வமான தகவல் இல்லை.

இருந்தாலும், எச்.எஸ்.பி.சி., வங்கி கணக்குகளில் கணக்கில் காட்டாத ரூ.8 ஆயிரத்து 448 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதில் ரூ.5 ஆயிரத்து 447 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்த தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு ஒரு வாரத்திலோ, 10 நாளிலோ நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு இப்போது உத்தரவு போட்டு உள்ளது. எனவே அந்த தகவல்கள் நமக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம்.

மத்தியில் இந்த அரசு பதவிக்கு வந்தபின்னர்தான் நமது வருவாய்த்துறை செயலாளரை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பினோம். சுவிட்சர்லாந்து அரசிடம் உயர் மட்ட ஆலோசனை நடத்தினோம். இரு தரப்பிலும் 2015-ம் ஆண்டு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் இரு தரப்பினரும் தகவல்கள் பகிர்ந்துகொள்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் எச்.எஸ்.பி.சி. வங்கி கணக்குகள் பற்றி தகவல் வரத்தொடங்கியது.

‘பனாமா லீக்’ ஊழல் விவகாரத்தில் 426 பேர் பற்றிய தகவல்கள் உள்ளன. அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story