திமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


திமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 5:55 AM GMT (Updated: 8 Aug 2018 5:55 AM GMT)

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Karunanidhi

புதுடெல்லி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். 

இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மக்களவையில் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவையில் வெங்கைய நாயுடு இரங்கல் குறிப்பை வாசித்தனர். கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பிக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த கருணாநிதி தலைசிறந்த தலைவர் என மாநிலங்களவையில் வெங்கைய நாயுடு புகழாரம் சூட்டினார். மேலும் பன்முக திறன் கொண்டவர் தலைவர் கலைஞர் என்றும் தெரிவித்தார். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story