வலதுசாரி அமைப்பை சேர்ந்தவரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்தது, வெடிகுண்டுகள் பறிமுதல்


வலதுசாரி அமைப்பை சேர்ந்தவரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்தது, வெடிகுண்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Aug 2018 9:50 AM GMT (Updated: 10 Aug 2018 9:50 AM GMT)

மராட்டியத்தில் வலதுசாரி இந்து அமைப்பை சேர்ந்தவரை அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. அவரிடம் இருந்து பெருமளவு வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என போலீஸ் தெரிவித்துள்ளது. #MaharashtraATS

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கார் மாவட்டம் நாலாசோபாரா பகுதியில் மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது வலதுசாரி இந்து அமைப்பை சேர்ந்த வைபவ் ராவுத்தை கைது செய்தனர். இந்து கோவான்ஸ் ரக்‌ஷா சமிதி அமைப்பை சேர்ந்த வைபவ் ராவுத் வீட்டில் இருந்து பெருமளவு வெடிப்பொருட்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது. இதில் தயாரிப்பு பணிகள் முடிவடையாத வெடிகுண்டுகள் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ராவுத்தை பயங்கரவாத தடுப்பு படை மும்பை கொண்டுவந்துள்ளது, அவரிடம் மேற்கொண்டு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பை சேர்ந்த சுனில் கான்வாத் பேசுகையில், “வைபவ் தைரியமான பசு பாதுகாவலர். இந்து கோவான்ஸ் ரக்‌ஷா சமிதி அமைப்பின் மூலம் தீவிரமாக செயல்பட்டார். அவர் பசுக்களை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இந்து அமைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற நோக்குடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வார். கடந்த சில மாதங்களாக அவர் எந்தஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. போலி வழக்குகளில் இந்து அமைப்பை சேர்ந்தவர்களை துன்புறுத்தும் சம்பவமாகும். ஏற்கனவே மாலேகான் வழக்கில் இது நிரூபணம் ஆகியுள்ளது. இப்போதைய கைது நடவடிக்கை மாலேகான் 2 என்ற சந்தேகத்தை எழுப்புகிறது,” என கூறியுள்ளார். 


Next Story