தேசிய செய்திகள்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு + "||" + Parliament is postponed without specifying the date

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18–ந் தேதி தொடங்கியது.

புதுடெல்லி,

மழைக்கால  கூட்டத்தொடரில் மக்களவையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும், திருப்திகரமாகவும் இருந்தது என கூறி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திருப்தி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததும், அதை அரசு முறியடித்ததும் நினைவுகூரத்தக்கது.

முஸ்லிம் சமூக ஆண்கள், மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்கிற ‘முத்தலாக்’ முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா’ மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.

‘முத்தலாக்’ விவகாரத்தில் புகாருக்கு ஆளாகிற ஆண்களுக்கு ஜாமீன் வழங்க வகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 3 முக்கிய திருத்தங்களுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. அந்த மசோதா நேற்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.

ஆனால் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாததால் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.