தேசிய செய்திகள்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு + "||" + Kerala floods: Death toll rises to 37, 25 landslides reported

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு
கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. #KeralaFloods
திருவனந்தபுரம்,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆனது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும்  531 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 60,622 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் வயநாடு, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 3 நாட்களில் கேரள மாநிலத்தில் சுமார் 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 21 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மழை, வெள்ளத்தால் மொத்தம் 1501 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 101 வீடுகள் முற்றிலும் இடிந்தநிலையில் இருப்பதாகவும் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இதனிடையே மாலை 4 மணியளவில், 2400 அடி நீர்மட்டம் கொண்ட இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால், 40 வருடங்களுக்கு பிறகு ஐந்து மதகுகள் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கேரள மாநிலத்தில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால், மலப்புரம், பாலக்காடு, எர்ணாக்குளம் ஆகிய பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் 32 பேர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து,  கேரள மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், வெள்ளத்தில் வீடு மற்றும் விளைநிலங்களை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.