கேரளாவில் மோசமான வானிலை, தகவல் தொடர்பு பாதித்த இடங்களிலும் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது - இந்திய ராணுவம்


கேரளாவில் மோசமான வானிலை, தகவல் தொடர்பு பாதித்த இடங்களிலும் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது - இந்திய ராணுவம்
x
தினத்தந்தி 12 Aug 2018 8:39 AM GMT (Updated: 12 Aug 2018 8:39 AM GMT)

கேரளாவில் மோசமான வானிலை, தகவல் தொடர்பு பாதித்த இடங்களிலும் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. #KeralaFloods2018

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க 3 படகுகள், 20 உயிர்காக்கும் படகுகள், உயிர் காக்கும் ஆடை, சிறப்பு கயிறு பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளம் பாதிப்பு குறித்து மீட்பு பணியில் உள்ள ராணுவ தரப்பில் இருந்து கூறியிருப்பதாவது:

கனமழை, வெள்ளத்துக்கு இடுக்கி மாவட்டத்தில் 18பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு இடங்களில் முதியவர்கள், குழந்தைகள் என 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை, தகவல் தொடர்பு பாதித்த இடங்களிலும் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. கேரளாவின் கண்ணூர், வயநாடும் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரத்தில் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story