குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் பலி


குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 12 Aug 2018 10:08 AM GMT (Updated: 12 Aug 2018 10:08 AM GMT)

குஜராத் மாநிலத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். #GujaratAccident #7Minor

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் பான்ச்மஹால் மாவட்டத்தில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் பலியாகினர். மேலும் காரில் பயணம் செய்த 3 பேர் பொதுமக்கள் உதவியுடன் உயிர் தப்பினர். இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ”கார் ஒன்றில் 10 சிறுவர்கள் குஜராத் மாநிலம் ஹலோலில் வசிக்கும் உறவினரை சந்திக்க சென்றுள்ளதாக தெரிகிறது. சந்திப்பிற்கு பின்னர் நேற்றிரவு ஹலோல்-போடெலி சாலை வழியே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையிலுள்ள வளைவுப்பாதையில் திரும்பும் போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரமுள்ள நீர் நிரம்பிய பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து நடந்த இடத்தில் குவிந்த பொதுமக்கள் 3 சிறுவர்களை படுகாயங்களுடன் மீட்டனர். ஏழு பேரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த ஏழு சிறுவர்களின் உடல்களும் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனக் கூறினார். இந்நிலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்த ஏழு சிறுவர்களும், போடெலி டவுண் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Next Story