கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரணமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு - ராஜ்நாத் சிங் அறிவிப்பு


கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரணமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு - ராஜ்நாத் சிங் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2018 3:07 PM GMT (Updated: 12 Aug 2018 3:07 PM GMT)

மழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #KeralaFloods


திருவனந்தபுரம், 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் கேரளா தத்தளிக்கிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சாலைகளை தற்காலிகமாக சீரமைத்து பொதுமக்களை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்தவண்ணம் உள்ளனர். மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டும் வருகின்றனர். சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளது. மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோரும் பார்வையிட்டார். இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட ராஜ்நாத் சிங் பேசுகையில், கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். 



மேலும் பேசுகையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மாநில அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளது. மத்திய குழு பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட கால தாமதம் ஆகும் என்பதால் உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது என்றார். 

Next Story