நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பா.ஜனதா வற்புறுத்தல் - சட்ட ஆணையத்துக்கு அமித்ஷா கடிதம்


நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பா.ஜனதா வற்புறுத்தல் - சட்ட ஆணையத்துக்கு அமித்ஷா கடிதம்
x
தினத்தந்தி 13 Aug 2018 11:15 PM GMT (Updated: 13 Aug 2018 9:24 PM GMT)

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என மத்திய ஆளுங்கட்சியான பா.ஜனதா கூறிவந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் 2014-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தார்.

இதனை வலியுறுத்தும் வகையில் பா.ஜனதா கட்சி நாளை (ஆகஸ்டு 15) முதல் 30-ந் தேதி வரை சமூக நீதி இயக்கம் நடத்த உள்ளது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சட்ட ஆணையம் ஆய்வு செய்துவருகிறது. இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்க முடிவு செய்தது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜனதா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜய் சஹஸ்ரபுத்தே, பூபேந்தர் யாதவ், அனில் பலுனி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் சட்ட ஆணைய தலைவர் பி.எஸ்.சவுகானை நேற்று சந்தித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

பின்னர் பூபேந்தர் யாதவ் எம்.பி. கூறும்போது, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற எங்கள் கட்சியின் கருத்தை சட்ட ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம். 2014 பொதுத்தேர்தலில் மிகப்பெரிய தொகையாக ரூ.4 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரே தேர்தல் மூலம் கணிசமான அளவுக்கு தேர்தல் செலவை குறைக்கலாம். அதேபோல மீண்டும், மீண்டும் தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவது தவிர்க்கப்படும்” என்றார்.

இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சட்ட ஆணையத்துக்கு 8 பக்க கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து மட்டுமல்ல, இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கொள்கை முடிவு. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். அதேபோல ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்று வருவதும் தவிர்க்கப்படும். இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்பது ஆதாரமற்ற வாதம். மாறாக இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும். இதுபற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது. இவ்வாறு அமித்ஷா கடிதத்தில் கூறியுள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சமீபத்தில் சட்ட ஆணையத்தை சந்தித்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜனதா கட்சியின் சில கூட்டணி கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கோவா முன்னேற்ற கட்சி தலைவரும், அம்மாநில பா.ஜனதா தலைமையிலான அரசின் வேளாண்மைத்துறை மந்திரியுமான விஜய் சர்தேசாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்குதேசம் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு போன்றவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிஜு ஜனதாதளம், அசாமின் போடோ மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் ஆதரித்துள்ளன. உத்தரபிரதேச மாநில சட்டமன்றத்துக்கும் 2019-ல் தேர்தல் நடத்துவதாக இருந்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் கூறியுள்ளார். அம்மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story