அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்து ராகுல் விமர்சனம்


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்து ராகுல் விமர்சனம்
x
தினத்தந்தி 14 Aug 2018 2:18 PM GMT (Updated: 14 Aug 2018 2:18 PM GMT)

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். #PMModi #RahulGandhi



புதுடெல்லி, 


இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு 70.06 ஆக கடுமையாக சரிந்தது. ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் துருக்கிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்றும் அமெரிக்காவிற்கு துருக்கி பதிலளித்துள்ளது. அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கையின் காரணமாக துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்ற நிலை இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துக்கொண்டே வரும் விவகாரத்தில் மத்திய அரசு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது. சமீப காலமாக பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடியின் மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்பிரச்சனையையும் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி ராகுல் காந்தி சாடி உள்ளார். அவருடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசை மோடி தாக்கி பேசியது இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோவுடன் ராகுல் பதிவிட்டுள்ள கருத்தில், வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு இருக்கிறது. இது உச்சத்தலைவர் (பிரதமர் நரேந்திர மோடி) மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகும். ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது என்பது குறித்து அவர் நடத்திய பொருளாதார வகுப்பை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள வீடியோவில் கவனியுங்கள் என பதிவிட்டுள்ளார். 

வீடியோவில் அப்போதைய காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது, டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுதொடர்ந்தால் இந்தியா உலக வரைப்படத்தில் இருந்தே தெரியாமல் போய்விடும் என கூறுகிறார். 

Next Story