தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் துணைக் கண்காணிப்பு குழு அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Supreme Court to hear petition on Mullaperiyar dam issue

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் துணைக் கண்காணிப்பு குழு அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் துணைக் கண்காணிப்பு குழு அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கனமழை பெய்து வருவதால் சில நாட்களுக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 138 அடிக்கு குறைவாக குறைக்க முடியுமா? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #KeralaFloods #MullaperiyarDam

புதுடெல்லி,


கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த உபரிநீரும் இடுக்கி அணையை நோக்கி செல்கிறது. 
முல்லைப்பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதை தொடர்ந்து, அந்த அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதினார். 

அணையின் பாதுகாப்பு கருதி கேரளா விடுத்துள்ள இந்த கோரிக்கையை, தமிழக தலைமைச் செயலாளருக்கு தெரிவித்து அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க மத்திய உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுப்பார் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாகவும் பினராயி விஜயன் கூறினார். இவ்விவகாரத்தில் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. 142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை நிர்வகித்து வருகிறோம்.

 முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அளவை தமிழக அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டு ஏற்பு

இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை பராமரிப்பது தொடர்பாக கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே மத்தியஸ்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கேரளாவில் வெள்ளத்தினால் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியது. முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை குறைக்ககோரி இடுக்கி பகுதியை சேர்ந்த ரசுல் ஜாய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

அவரது தரப்பில் இடுக்கி மாவட்ட மக்கள் பயத்துடனே வாழ்ந்து வருகிறார்கள், முல்லைப் பெரியாறு அணை நீரை திறந்துவிடுவதில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். எந்த வித அறிவிப்பும் இல்லாமல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது என வாதிடப்பட்டது. இதற்கிடையே அணை பாதுகாப்பில்லாமல் இருப்பதாக கற்பனையில் கூறாதீர்கள். சரியான ஆதாரங்களுடன் வாதங்களை முன்வையுங்கள் என மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மத்திய, கேரளா, தமிழக அரசு அதிகாரிகள் அடங்கிய முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுக்கள் தொடர்ந்து கலந்தாலோசித்து செயலாற்றி வருகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்தது. 

கனமழை பெய்து வருவதால் சில நாட்களுக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 138 அடிக்கு குறைவாக குறைக்க முடியுமா?  தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வியை எழுப்பியது. முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைத்தால் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று கேரளா கூறியது.  சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப் பெரியார் அணையின் நிலவரம், தண்ணீர் திறப்பு, இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து நாளை விரிவான அறிக்கை தர துணைக் கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

 பாதுகாப்பாகவே உள்ளது

முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பதாகவே இதுவரை அணையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரள அரசு அணை பலவீனமாக இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போதிலும், நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளிலும் அணை பலமாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது. 

2014–ம் ஆண்டு தீர்ப்பு அளித்த போதிலும் பேபி அணையை பலப்படுத்த எந்த பணிகளும் இதுவரை தொடங்கவில்லை. கேரளா ஒத்துழைப்பை கொடுக்கவிலலை. பேபி அணை பலப்படுத்தப்பட்டால் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. பேபி அணையை பலப்படுத்தாத நிலையிலேயே அணை பலமாக இருப்பதாகவே இதற்கு முந்தைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் எதிர்கால நலன் கருதியே பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுள்ளது.

அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் கேரள மாநிலம் வழியாக உபரிநீர் திறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், 142 அடியாக இருக்கும் போது, 7 ஆயிரத்து 130 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும். 152 அடியாக இருக்கும் போது மொத்த கொள்ளளவு 9 ஆயிரத்து 862 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும். இயல்பான மழை அளவையும் மீறி அதிகப்படியான மழைப் பொழிவு ஏற்பட்டால் மட்டுமே உபரிநீர் வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள ஆற்றுக்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமின்றி வாழ முடியும்.