தமிழக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து உதவிகளையும் செய்வோம் - வாஜ்பாய்


தமிழக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து உதவிகளையும் செய்வோம் - வாஜ்பாய்
x
தினத்தந்தி 16 Aug 2018 11:00 PM GMT (Updated: 16 Aug 2018 9:54 PM GMT)

தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில் (1-05-2004), தமிழக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து உதவிகளையும் செய்வோம் என வாஜ்பாய் கூறினார்.


கேள்வி:- தமிழக மக்களுக்கு நீங்கள் வழங்கும் வாக்குறுதி என்ன?

பதில்:- தமிழக மக்கள் எதிர் நோக்கியுள்ள கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைகள் எனக்கு நன்றாகவே தெரியும். இந்த பிரச்சினைக்காக மத்திய அரசாங்கம், மாநில அரசு, தமிழக மக்கள் ஒன்றாக இணைந்து புதுமையான நீடித்த தீர்வுகளை காண வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாட்டுக்கு கூடுமான எல்லா உதவிகளையும் மத்திய அரசாங்கம் நல்கும் என்ற உறுதியை நான் தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். குறிப்பாக நதிகளை இணைக்கும் திட்ட பணிகளை தொடங்க உறுதி பூண்டுள்ளோம். தேவையான நிதியை இந்த ஒட்டு மொத்த முக்கியமான திட்டத்துக்காக உருவாக்குவோம். மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே தேவையான அரசியல் உறுதிப்பாடு மற்றும் ஒருமித்த உணர்வை ஏற்படுத்துவோம். மேலும் தண்ணீர் சேமிப்பு, தண்ணீரை திரும்ப பயன்படுத்துதல், திறமையான தண்ணீர் நிர்வாகம் தொடர்பான தமிழ்நாட்டின் மாபெரும் சாதனையான தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையை மேலும் வலுப்படுத்த தமிழ்நாட்டுக்கு உதவுவோம். தமிழ்நாட்டில் உள்ள சிறு தொழில் முனைவோர்களை அவர்களது, பெரிய வெற்றிக்காக பாராட்டுகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் உற்பத்தி பகுதியாகவும், அறிவுசார் பொருளாதார மைய மாகவும் ஆக்க விரும்புகிறோம். இந்த இலக்கை அடைய தமிழ் நாடு பெரிய பங்கை ஆற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கேள்வி:- காவிரி பிரச்சினை தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு இவ்வளவு நீண்டகால தாமதம் ஏற்பட்டு இருப்பதற்கு பிரதமர் என்ற முறையில் என்ன சொல்கிறீர்கள்?, இதற்கு யார் பொறுப்பு?, இது தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

பதில்:- பல ஆண்டுகளாக உள்ள காவிரி நீர் தாவாவுக்கு தீர்வு காண தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது முயற்சிகளை மிக தீவிரமாக தொடங்கியதை தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் நன்கு அறிவார்கள். சுமூகமான இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை காண எங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம். எனினும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண மத்திய அரசாங்கம் உதவத்தான் முடியும். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எதையும் கட்டாயப்படுத்த முடியாது. காவிரி நதி நீர் ஆணையம் மழை இல்லாத காலங்களில் எவ்வாறு தண்ணீரை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று வகுத்து கொடுத்த முறையை கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இடர்பாட்டு காலத்தில் கூட தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகள் காவிரி நதி நீரை பங்கிட்டுக்கொள்ளும் வகையில் செயல்படுத்தக்கூடிய ஒரு தீர்வை உருவாக்க நான் தொடர்ந்து கடுமையாக பாடுபடுவேன். இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.

Next Story