கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை


கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை
x
தினத்தந்தி 17 Aug 2018 3:20 AM GMT (Updated: 17 Aug 2018 3:20 AM GMT)

கனமழை காரணமாக கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. #KeralaFloods

திருவனந்தபுரம்,

கேரளாவில் பருவ மழையின் கோரத்தாண்டவம் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் 14 மாவட்டங்களும் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்து வருகிறது.

முல்லைப்பெரியாறு, இடுக்கி, இடமலையார் அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கரையோர மக்களை பேரழிவுக்கு தள்ளி இருக்கிறது. சாலைகள் அனைத்தும் நீரோட்டமாக மாறியிருப்பதால், அங்கு பாதை எது? ஆறு எது? என வேறுபாடு காணமுடியாத அளவுக்கு முற்றிலும் வெள்ளக்காடாகி வருகிறது. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை, பேரிடர் மீட்புக்குழு முப்படை வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இவ்வாறு மீட்கப்படும் மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக 1,067 முகாம்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 2 லட்சம் பேர் தஞ்சமடைந்து இருக்கின்றனர். 

இந்த நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
கேரளாவில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story