ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
x
தினத்தந்தி 17 Aug 2018 7:07 AM GMT (Updated: 17 Aug 2018 7:07 AM GMT)

நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், ஆலை எக்காரணம் கொண்டும் இயங்க அனுமதி கிடையாது. நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் கோரிக்கை குறித்து பசுமை தீர்ப்பாயமே விசாரித்து உத்தரவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Next Story