ஆச்சரியமான அபராதம்


ஆச்சரியமான அபராதம்
x
தினத்தந்தி 19 Aug 2018 8:07 AM GMT (Updated: 19 Aug 2018 8:07 AM GMT)

சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமாக மரக்கன்றுகளை பரிசாக வழங்கி நடும் திட்டத்தை தெலுங்கானா போலீசார் தொடங்கி இருக்கிறார்கள்.

தெலுங்கானா அரசு மேற்கொண்டு வரும் மர வளர்ப்பு திட்டத்தின் அங்கமாக இந்த முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் 24 முதல் 33 சதவீதம் வரை பசுமை பரப்பளவை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மரக்கன்றுகள் வளர்ப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காட்வால் மாவட்ட போலீசார் 2 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அதனை செயல்படுத்தும் விதமாகவும், சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பதை தடுக்கும் முனைப்புடனும் மரக்கன்றுகளை வினியோகித்து வருகிறார்கள்.

‘‘தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இங்கிருந்து கர்நாடகம், கேரள மாநிலத்திற்கு செல்பவர்கள் அதிக அளவில் விபத்தில் சிக்குகிறார்கள். அத்தகைய விபத்து அபாயங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து விதி மீறல்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

ஹெல்மெட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் குறிப்பிட்ட தொகையை அபராதம் விதிப்பதுடன் மரக்கன்றுகளையும் வழங்கி வருகிறோம். மேலும் காட்வால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்கள், போலீசார் குடியிருப்பு பகுதிகள், பயிற்சி வழங்கும் இடங்கள், மாவட்ட போலீஸ் அலுவலக வளாகங்கள் ஆகியவற்றில் 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம். மாநிலம் முழுவதும் மரக்கன்று வளர்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்களில் போலீசார் சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார், போலீஸ் அதிகாரி. 

Next Story