அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண்


அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண்
x
தினத்தந்தி 20 Aug 2018 10:17 AM GMT (Updated: 20 Aug 2018 10:17 AM GMT)

அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண் இருப்பது போன்று வெளியான புகைப்படம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐதராபாத்

தெலுங்கானா அரசு சார்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி செய்தித்தாள்களில் வெளியான விளம்பரத்தில் விவசாயக் காப்பீடு மற்றும் கண் ஆய்வு நிகழ்ச்சி திட்டங்கள் குறித்து விளம்பரம் வந்தது.

அந்த விளம்பரத்தில், பத்மா என்ற பெண் அவரின் குழந்தை மற்றும் கணவருடன் இருப்பதுபோன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில், பத்மாவின் கணவர் நாயாகுலா நாகராஜூக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பத்மாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பேசிய பத்மா, குடும்பத்துடன் விளம்பரத்துக்குப் புகைப்படம் கொடுத்தால், லோன் வாங்கித் தருவதாக சிலர் எங்களைத் தொடர்புகொண்டனர். திடீரென்று, நாளிதழ்களில் எங்களுடைய குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதுபோல விளம்பரங்கள் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

எங்களிடம் சொந்தமாக நிலம் கிடையாது. நாங்கள் எப்படி, விவசாயக் காப்பீடு பெற முடியும். என்னுடைய கணவரைப் போல, வேறு ஒருத்தரின் புகைப்படத்தைப் போட்டது மிகவும் மோசமான ஒன்று. அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், எங்கள் குடும்பத்தினர் மிகவும் வேதனையடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.இது குறித்து பேசிய தெலுங்கானா மக்கள் தொடர்பு அதிகாரி, விவகாரம் தொடர்பாக விளம்பர நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Next Story