மத்திய அரசு சார்பில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் - ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்றது


மத்திய அரசு சார்பில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் - ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்றது
x
தினத்தந்தி 20 Aug 2018 9:15 PM GMT (Updated: 20 Aug 2018 7:10 PM GMT)

மத்திய அரசு சார்பில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்றது.

கோழிக்கோடு,

கேரள மாநிலத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையில் மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் கேரள மாநிலத்துக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உணவுப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் நேற்று திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் ரெயில் நிலையங்களுக்கு சிறப்பு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இதில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள், மண்எண்ணெய், குடிநீர், 100 டன் பருப்பு, போர்வை, துண்டுகள் ஆகியவை உள்ளன. இதேபோன்று ராணுவ விமானம் மூலமும் கப்பல் மூலமும் உணவுப் பொருட்கள் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிலையில் கொச்சியில் இருந்து பெங்களூரு, கோவை விமான சேவையும் நேற்று முதல் தொடங்கியது. வெளி மாநிலங்களில் இருந்து விமானங்கள் மாலை 5 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் இறங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடும் நிலவி வந்தது. இதையொட்டி மங்களாபுரம், கோவையில் இருந்து லாரிகள் மூலம் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணனூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு பெட்ரோல் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் நிலவி வந்த பெட்ரோல் தட்டுப்பாடும் குறைந்துள்ளது.

Next Story