மூணாறு-போடி இடையே நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு


மூணாறு-போடி இடையே நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2018 10:08 PM GMT (Updated: 20 Aug 2018 10:08 PM GMT)

மூணாறு-போடி சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மூணாறு,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை கனமழை புரட்டி போட்டது. இடுக்கி அணை திறக்கப்பட்டதால் செருதோணி நகரம் வெள்ளக்காடானது. வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அங்கு மழை குறைந்துள்ளது. இதனால் வெள்ளம் கொஞ்சம், கொஞ்சமாக வடிய தொடங்கியுள்ளது. கனமழையால் ஒரு வாரத்துக்கும் மேல் திறக்காமல் இருந்த கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

தமிழ்நாட்டில் இருந்து பஸ் உள்ளிட்ட எந்த ஒரு வாகனமும் மூணாறுக்கு வரவில்லை. மேலும் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட உணவுபொருட்கள், துணிமணிகள் தேவிகுளத்தில் முடங்கி கிடக்கின்றன. இதுதவிர பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்ல முடியவில்லை. இதை வாய்ப்பாக பயன்படுத்தி சிலர் அதிக விலைக்கு காய்கறி மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

மூணாறு பகுதிகளில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் ஆத்துக்காடு நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அளவுக்கு அதிகமாக வெள்ளம் கொட்டுவதால் அங்குள்ள பாலம் சேதம் அடைந்தது. மூணாறு-அடிமாலி சாலையில் பாறைகள் உருண்டு கிடப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காலனி குடியிருப்பு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அரசு கலைக்கல்லூரி அருகே மூணாறு-போடி சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. சீரமைப்பு பணி முடிந்தால் தான் மூணாறு-போடி இடையே போக்குவரத்து சீராகும்.

Next Story