வதந்திகளுக்கு வருகிறது செக்! போலி செய்திகளை பரப்புவரை கண்டறியும் வசதியை ஏற்படுத்த வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு வலியுறுத்தல்


வதந்திகளுக்கு வருகிறது செக்! போலி செய்திகளை பரப்புவரை கண்டறியும் வசதியை ஏற்படுத்த வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Aug 2018 12:06 PM GMT (Updated: 21 Aug 2018 12:06 PM GMT)

போலி செய்திகளை பரப்புவரை கண்டறியும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. #WhatsApp

புதுடெல்லி,

சமூக வலைதளச் செயலிகளில் பிரதானமாக விளங்கும் வாட்ஸ் - அப், இந்தியாவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் - தொழில்நுட்ப ரீதியில் அதில் பல்வேறு பயன்கள் இருந்தாலும், மறுபுறம் பல தவறான செய்திகள் அதன் வாயிலாக பரப்பப்படுகிறது. குழந்தை கடத்தும் கும்பல், பசு கடத்தல் கும்பல் என வதந்திகள் பரவுவதை நம்பி பல்வேறு இடங்களில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.

இத்தகைய தவறான செய்திகள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் - அப் நிறுவனத்துக்கு ஏற்கெனவே மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்த சூழலில், வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி,  கிறிஸ் டேனியல்ஸ், ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் இன்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்தார். 

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவிசங்கர் பிரசாத், “ எங்களின் சந்திப்பு ஆக்கப்பூர்வமான முறையில் இருந்தது. பொய்யான தகவல்களை பரப்புவதற்கு வாட்ஸ் அப், தவறாக பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப்  நிறுவனமும் இத்தகைய பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளது. இந்தியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாட்ஸ் அப் நிறுவனம் செயல்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

இந்த சந்திப்பின் போது, வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவிலும் தனது  அலுவலகத்தை அமைக்கவேண்டும், தனது அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும், இந்திய சட்டங்களை மதித்து செயல்படுவதை உறுதி செய்யவேண்டும், இந்திய விசாரணை முகமைகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும், வாட்ஸ் அப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

போலி செய்திகளை  பரப்புவரை கண்டறியும் வசதியை ஏற்படுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகள்  இந்தியா தரப்பில் வாட்ஸ் நிறுவனத்திடம் வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அரசின் கோரிக்கைகள் அனைத்தையும் செயல்படுத்துவதாக வாட்ஸ் அப் நிறுவனமும் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story