ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு : கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு


ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு : கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 10:45 PM GMT (Updated: 21 Aug 2018 9:50 PM GMT)

ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தும் முடிவையும், ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்தும் முடிவையும் மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும்.

புதுடெல்லி,

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தி வந்தது.

இந்நிலையில், கடந்த மாதம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். புதிதாக அமைக்கப்பட்ட தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) ‘நீட்’ தேர்வை இனிமேல் நடத்தும் என்றும், ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், ‘நீட்’ தேர்வு, ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறினார்.

அவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வு நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினர்.

மேலும், மத்திய சுகாதார அமைச்சகமும் இந்த அறிவிப்புக்கு கடிதம் மூலம் அதிருப்தி தெரிவித்தது. ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தினால், தேர்வு அட்டவணை, மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும் என்றும், ஆன்லைன் முறை தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியது.

இந்த எதிர்ப்பை தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது முந்தைய முடிவுகளை கைவிட்டுள்ளது.

வழக்கம்போல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் தேர்வு முறை கிடையாது என்றும் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கடந்த ஆண்டு பின்பற்றிய முறையே இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, இந்த மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும்.

ஆன்லைன் முறை அல்லாமல், பேனா, பேப்பர் முறையிலேயே தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மொழிகளிலேயே தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ‘நீட்’ தேர்வு, 2019–ம் ஆண்டு மே 5–ந் தேதி நடைபெறும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.


Next Story