மழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் : தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை


மழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் : தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை
x
தினத்தந்தி 26 Aug 2018 11:15 PM GMT (Updated: 26 Aug 2018 9:23 PM GMT)

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது. அதில், தென்னிந்தியாவில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில், மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:–

தென்னிந்தியாவில், மொத்தம் 125 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், 54 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது. அதாவது, 40 சதவீத மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாகவே பெய்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 32 மாவட்டங்களில், 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. ஒரு மாவட்டத்தில், மிகஅதிக பற்றாக்குறையாக பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவில், 10 மாவட்டங்களில் அதிக மழையும், 2 மாவட்டங்களில் மிகஅதிக மழையும் பெய்துள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 மாவட்டங்களிலும் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

கர்நாடகாவில், மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களிலும், இதர பகுதியில் உள்ள 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

தெலுங்கானாவில், மொத்தம் உள்ள 31 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாக பருவமழை பெய்துள்ளது. லட்சத்தீவிலும், பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

நாடுதழுவிய அளவில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், மழைப்பொழிவு 27 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. நாட்டில் உள்ள 91 பெரிய அணைகளின் மொத்த கொள்ளளவில் 63 சதவீத நீர்மட்டம் உள்ளது. தென்னிந்தியாவில், 31 அணைகளில் 76 சதவீத நீர்மட்டம் உள்ளது.

இவ்வாறு இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.


Next Story