கேரளாவில் 29-ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க திட்டம்


கேரளாவில் 29-ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க திட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2018 5:15 AM GMT (Updated: 25 Oct 2018 12:32 PM GMT)

கேரளாவில் 29 ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது

திருவனந்தபுரம்:

கனமழை, வெள்ளம் காரணமாக கேரளாவில் 31 சதவீத  வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பேய்மழை கொட்டியது. இதன் காரண மாக மாநிலம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் காரணமாக பல பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். தற்போது மழை குறைந்த நிலையில், நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு மற்றும் சேதம் குறித்து மாநில அரசின் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுனர். மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரளாவிற்கு சுமார் ரூ.35 ஆயிரம் கோடி ஆகும் என்று நிதித்துறை தெரிவித்துள்ளது.

கேரளவெள்ள நிவாரண நிதிக்காக கேரள மக்கள் அனைவரும் தங்களது ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக தாருங்கள் என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும் முகாம்களில் 4 லடசம் மக்கள் இன்னும் உள்ளனர்.  சாலைகளை சரி செய்ய ரூ.5,815.25 கோடி தேவைப்படும் என பொதுப்பணித்துறை கூறி உள்ளது.

3,64,000 பறவைகள், 3,285 பெரிய விலங்குகள் மற்றும் 14,274 சிறிய விலங்குகளின் இறந்த  உடல்கள் அகற்றப்பட்டு உள்ளன.

மத்திய அரசு ஏற்கனவே 600 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளது. மாநில அரசின்   நிவாரண நிதிக்கு ரூ. 562.45 கோடி இதுவரை சேர்ந்து உள்ளது.

ஓனம் விடுமுறையை அடுத்து  கல்வி நிறுவனங்கள்,  மீண்டும் ஆகஸ்ட் 29 ம் தேதி  திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ள நீரால் மூழ்கிய 700 பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி  ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்த பள்ளிகளில் பெரும்பாலானவை முக்கிய உள்கட்டமைப்பை இழந்துள்ளன.  குறிப்பாக ஆலப்புழா மாவட்டத்தில் பல பள்ளிகள்  நிவாரண முகாம்களாக மாறியுள்ளன.

நிவாரண முகாம்களை மற்ற கட்டிடங்களுக்கு மாற்றுவதற்கும், தனியார் வளாகத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்வதற்கும் மாவட்ட கலெக்டர்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 

Next Story