மதுரை தீண்டாமை சுவர் தொடர்பான வழக்கு: ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மதுரை தீண்டாமை சுவர் தொடர்பான வழக்கு: ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Aug 2018 10:38 PM GMT (Updated: 28 Aug 2018 10:38 PM GMT)

மதுரை தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பாக மதுரை கலெக்டருடன் சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

புதுடெல்லி, 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சந்தையூரில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலை சுற்றி ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதனால் இரு சமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. மதுரை மாவட்ட நிர்வாகம் இரு சமூக மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது.

சர்ச்சைக்குரிய சுவரின் ஒரு பகுதியை இடிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு, சுவரை இடிக்க உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகம் அதனை தீண்டாமை சுவர் என அறிவித்து, கடந்த ஜனவரி மாதம் போலீஸ் பாதுகாப்புடன் சுவரை இடித்தது.

தீண்டாமை சுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை எதிர்த்து எம்.கருப்பையா என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மார்ச் 8-ந் தேதி தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக எம்.கருப்பையா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட கலெக்டர் 28-ந் தேதி உரிய ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு மீண்டும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் குரியன் ஜோசப், சஞ்ஜய்கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை கலெக்டர் டாக்டர் எஸ்.நடராஜன் கோர்ட்டில் ஆஜரானார். மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தத்தா, தமிழக அரசு வக்கீல் கே.வி.விஜயகுமார், மற்றொரு எதிர் பதில் மனுதாரர் குருசாமி தரப்பில் மூத்த வக்கீல் காலின் கொன்சால்வெஸ், வக்கீல் நெடுமாறன் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இப்போது அந்த பகுதியில் எவ்வாறு உள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மதுரை கலெக்டர் எஸ்.நடராஜன், அப்பகுதியில் அமைதி நிலவுகிறது என்றும், ஏற்கனவே இருதரப்பினரையும் அழைத்து பேசி சுமுகமாக முடிக்கப்பட்டது என்றும் கூறினார். இதுதொடர்பான தமிழக அரசு கடிதம் ஒன்றையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

மனுதாரர் தரப்பில், அந்த சுவர் தீண்டாமை சுவராக கட்டப்பட்டது அல்ல. அந்த கோவில் 100 ஆண்டுகள் பழமையானது. அங்கு சுவர் இருந்தபோதும் அனைவரும் கோவிலுக்கு வரும் அளவுக்கு பாதை அமைக்கப்பட்டு இருந்தது என்று வாதாடப்பட்டது. இதற்கு நீதிபதிகள், பொது இடத்தில், அரசு இடத்தில் எப்படி சுவர் எழுப்பலாம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கலெக்டர், அது அரசு இடம் தான். அங்கு தனிநபர்கள் சுவர் எழுப்ப அனுமதி இல்லை. கோவிலை சுற்றியுள்ள காலி இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. எனவே தான் அதற்கு இடையூறாக இருந்த பிரச்சினைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் கோவில் திருவிழாவின்போது நிகழ்ச்சி நடத்த அனுமதித்தோம். அந்த சுவரை முழுவதுமாக இடிக்கவில்லை. 2 மீட்டர் அளவுக்கு இடிக்கப்பட்டு அங்கன்வாடி மையத்துக்காக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதற்கு மனுதாரர் தரப்பில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அரசு இடம் என்று எப்படி கூறமுடியும் என்றனர். இதற்கு நீதிபதிகள், ஒருவர் தன் சொந்த இடத்தில் கட்டிடம் கட்டவே அரசு அனுமதி தேவை இருக்கும் நிலையில் எப்படி அனுமதி இல்லாமல் இந்த சுவர் எழுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் (கலெக்டருடன்) அனைத்துதரப்பினரும் அமர்ந்து பேசி இந்த விவகாரத்தில் முடிவை எட்டுங்கள். இல்லையேல் சுவர் முழுவதையும் இடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவை உறுதிப்படுத்த நேரிடும். பேச்சுவார்த்தை முடிவு பற்றி ஒரு வாரத்தில் கோர்ட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறி விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story