ராஜ்நாத் சிங்குடன் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு கேரளாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்


ராஜ்நாத் சிங்குடன் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு கேரளாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Aug 2018 10:10 AM GMT (Updated: 30 Aug 2018 10:10 AM GMT)

ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய கேரள மாநில எம்.பி.க்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியுள்ளனர்.


புதுடெல்லி,


கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட அழிவினால் கேரளா பெரும் பொருளாதார இழப்பை அடைந்துள்ளது. மாநிலத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தை கட்டமைக்க பல்வேறு தரப்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் மத்திய அரசு ரூ. 600 கோடி அறிவித்துள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் நிவாரணத்துக்காக மத்திய அரசு அளித்த நிவாரண தொகையை காட்டிலும், மக்களும், பல்வேறு மாநில அரசுகளும் அளித்த நிவாரண தொகை அதிகமாக இருக்கிறது. இவ்வாறு கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி நிதி வந்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்கள். அப்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே கேரளாவிற்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில் கேரளா தரப்பில் இந்த கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஏகே அந்தோணி பேசுகையில், கட்சி வேறுபாடு கருதாது நாங்கள் கேரளாவை மறுகட்டமைப்பு செய்ய ஒற்றுமையாக உள்ளோம். கேரளாவிற்கு அதிகமான நிதி வேண்டும். வெளிநாட்டு நிதியுதவி மீதான கட்டுப்பாட்டை ரத்து செய்ய உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டு உள்ளோம். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் பேசுவதாக கூறினார்,” என குறிப்பிட்டார். 

Next Story