சட்டப்பிரிவு 35-ஏ விவகாரம்: காஷ்மீரில் 2-வது நாளாக முழு அடைப்பு போராட்டம்


சட்டப்பிரிவு 35-ஏ விவகாரம்: காஷ்மீரில் 2-வது நாளாக முழு அடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2018 7:02 AM GMT (Updated: 31 Aug 2018 7:02 AM GMT)

சட்டப்பிரிவு 35-ஏ நீக்க எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் 2-வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு  35-ஏவை நீக்க எதிர்ப்புத் தெரிவித்து பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் 2-வது நாளாக இன்று நீடிக்கிறது. இதன் காரணமாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சையத் அலி ஷா கிலானி, மிர்விஸ் உமர் ஃபரூக் மற்றும் யாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாதிகளின் கூட்டமைப்பு 35ஏ அரசியல் சட்டப்பிரிவை நீக்க எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளிலும் அனைத்து கடைகள், பொதுப்போக்குவரத்து, வியாபாரம் மற்றும் கல்வி நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.போக்குவரத்து வசதி ஸ்தம்பித்துள்ளதால் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஊழியர்களின் வருகை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற இருந்த முதுகலைப் பட்டப் படிப்புக்கான தேர்வுகள் வேறுதினங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

.காஷ்மீர் பள்ளத்தாக்கில் தடைவிதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்குரிய பகுதிகளில் காவல் படையும் துணை ராணுவப் படையும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.

1954 ஆம் ஆண்டு, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 35- ஏ பிரிவு இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது. இந்தப் பிரிவின் மூலம், ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது. 35- ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில் இருந்தே, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. 


Next Story