பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு -ஆர்பிஐ


பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால்  கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு -ஆர்பிஐ
x
தினத்தந்தி 31 Aug 2018 8:46 AM GMT (Updated: 31 Aug 2018 8:46 AM GMT)

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளது என ஆர்பிஐ அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. #RIB

புதுடெல்லி

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. பின்னர் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 2,000, 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

ஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் கள்ளத்தனமாக தயாரித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இத்தகைய கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் அதிகாரிகளிடம் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை பற்றியும் கூறப்பட்டு உள்ளது.

இதில் கடந்த 2016-17-ம் ஆண்டில் வெறும் 199 புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கிய நிலையில், 2017-18-ம் ஆண்டில் 9,892 நோட்டுகள் சிக்கி இருக்கின்றன. 2,000 ரூபாய் நோட்டுகளை பெறுத்தவரை 2016-17-ல் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 638 ஆக இருந்த நிலையில், கடந்த 2017-18-ல் 17,929 நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

இதைப்போல 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 35 சதவீதமும், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 154 சதவீதமும் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story