ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் நியமனம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலை நியமனம் செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
புதுடெல்லி,
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனி குழு அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், எனவே அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் வாதிட்டது.
மேலும் ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கிய கோப்புகள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
எனினும் தமிழக அரசின் வாதத்தை நிராகரித்த பசுமை தீர்ப்பாயம் வேதாந்தா குழுமத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
அதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஜெ.வஜிப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அந்த குழுவின் தலைவரான எஸ்.ஜெ.வஜிப்தார், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் புதிய தலைவராக மேகாலயா மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலை நியமனம் செய்து பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது.
மேலும் இந்த ஆய்வை 6 மாத காலத்துக்குள் நடத்தி முடித்து, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டது.
Related Tags :
Next Story