விபத்தில் இறந்த ஹரிகிருஷ்ணாவின் உடலுடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் நீக்கம்
என்.டி.ராமாராவ் மகன் ஹரிகிருஷ்ணாவின் உடலுடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
நெல்லூர்
என்டி ராமாராவின் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் தனது ரசிகரின் திருமணத்துக்காக நெல்லூர் மாவட்டம் காவாலிக்கு காரில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்று விட்டு திரும்பி கொண்டு இருக்கும் போது நல்கொண்டா மாவட்டத்தில் நார்கெட்பள்ளி- அட்டங்கி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார்.
இதையடுத்து அவர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலையில் ரத்த காயத்துடன் மயக்கமான நிலையில் சாலையில் கிடந்தார். ரத்தம் சொட்ட சொட்ட அவரை காமினேனி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஹரிகிருஷ்ணாவின் உயிரை காக்க மருத்துவர்கள் கடுமையாக போராடினர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் அறிவிப்புக்கு பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல அங்கு வந்த வார்டு பாயும், வார்டு பெண்ணும் , இரு செவிலியர்களும் இறந்த ஹரிகிருஷ்ணாவின் உடலுடன் செல்பி எடுத்துள்ளனர்.
வார்டு பாய் எடுத்த செல்பிக்கு மற்ற 3 பேரும் சிரித்தபடியே போஸ் கொடுத்தனர். இந்த செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த 4 பேரையும் பணியிலிருந்து நீக்கியது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இது துரதிருஷ்டவசமான சம்பவம். எங்கள் ஊழியர்களின் செயலுக்காக மிகவும் வருந்துகிறாம் என கூறி உள்ளது.
Related Tags :
Next Story