மழை, வெள்ளத்தினை தொடர்ந்து கேரளாவை மிரட்டும் எலிக்காய்ச்சல் - 23 பேர் உயிரிழப்பு


மழை, வெள்ளத்தினை தொடர்ந்து கேரளாவை மிரட்டும் எலிக்காய்ச்சல் - 23 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Sep 2018 6:51 AM GMT (Updated: 1 Sep 2018 6:51 AM GMT)

மழை, வெள்ளம் பாதித்த கேரளாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பால் தற்போது 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #KeralaFlood

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பெய்யத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, தீவிரமடைந்து அம்மாநில மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் என அனைத்துத் தரப்பிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. வெள்ளம் வடிந்த நிலையில் மீட்புப் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், மழைக் காரணமாக நோய்த் தொற்றுகளும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எலிக்காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியானது. மேலும் இதில் இறப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனை கேரள சுகாதரத்துறை உறுதி செய்துள்ளது. இதனால், சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த 5 நாட்களில் எலிக்காய்ச்சலுக்கு 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலியின் சிறுநீர் மூலம் (லெப்டோஸ்பை ரோசிஸ்) மனிதர்களுக்கு எலி காய்ச்சல் பரவுகிறது. இதில் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் ஆகிய இடங்களிலும் இந்த பாதிப்பு இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட தொற்று நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் தாங்களாகவே சுய சிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்கும்படியும், அருகில் உள்ள சுகாதார மையத்தை ஆலோசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Next Story