ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக தொழிலாளி சாவில் மர்மம்: மகன்கள் புகார்
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய மகன்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஸ்ரீகாளஹஸ்தி,
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய கும்பல் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் திருவண்ணாமலை மாவட்டம் கானமலை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி காமராஜ் (வயது 53) பலியானார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் காமராஜ் பிணத்தை வாங்க அவருடைய மனைவி காமாட்சி, மகன்கள் ராமராஜ், சசி மற்றும் உறவினர்கள் ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அவர்களிடம், ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்று உடனடியாக பிணத்தை எடுத்து செல்ல வேண்டும் என்றும் கூறினர். காமராஜ் இறந்ததில் சந்தேகம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், காமராஜின் உறவினர்களை தாக்கி ‘பூட்ஸ்’ காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து காமராஜின் மகன்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களின் தந்தை காமராஜ் சில நாட்களுக்கு முன்பு கட்டிட வேலைக்கு செல்வதாக தான் வீட்டில் கூறி விட்டுச் சென்றார். ஆனால், திருவண்ணாமலை போலீசார் எங்களின் தந்தை ஆந்திர வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
எங்களுக்கு தகவல் வந்தது மதியம் 2 மணிக்கு, ஆனால் அவர் இறந்ததற்கான முதல் தகவல் அறிக்கை போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு 2.30 மணிக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்களின் தந்தையை பிடித்து, அவரிடம் பெயர், ஊர் விவரங்களை சேகரித்து அதன் பிறகு சுட்டுக் கொன்றார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story