சபரிமலையில் பக்தர்கள் கட்டுப்பாட்டிற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு எதிர்ப்பு


சபரிமலையில் பக்தர்கள் கட்டுப்பாட்டிற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Sept 2018 7:03 PM IST (Updated: 3 Sept 2018 7:03 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் ஆன்லைன் பதிவுமுறை சாத்தியமற்றது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூறியுள்ளது.


திருவனந்தபுரம், 


கேரள மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ரூ. 100 கோடி அளவில் சேதம் அங்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சபரிமலையில் உள்ள அன்னதான மண்டபம், ராமமூர்த்தி மண்டபம், நடைபயண மண்டபம் மற்றும் சர்வீஸ் ரோடு உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. இதனை கட்டமைக்கும் பணிகளை  திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. 

இதற்கிடையே நவம்பர் மாதம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கவும் கேரள காவல்துறை மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தது. நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்க கோரியும், காவல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிமுகப்படுத்தி இருக்கும் விர்ச்சுவல் கியூ மூலமாகப் பக்தர்களின் பதிவை கணக்கிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் விர்ச்சுவல் கியூ மூலம் பதிவு செய்யாதவர்கள், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது, அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆன்லைன் பதிவுமுறையை பின்பற்றலாம் என காவல்துறை தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இப்போது கோவிலில் பக்தர்கள் கூட்டத்திற்கு கட்டுப்பாட்டிற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு மறுப்பு தெரிவித்துள்ளது. தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் பேசுகையில், திருப்பதி கோவிலில் பின்பற்றப்படுவது போல சபரிமலையிலும் தரிசனத்துக்கு ஆன்லைன் பதிவுமுறை பின்பற்றலாம் என ஒரு பரிந்துரை இருக்கிறது. ஆனால் சபரிமலையின் தனித்தன்மை மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக இந்த ஆன்லைன் பதிவுமுறை இங்கு நடைமுறையில் சாத்தியமற்றது என்றார். 

விர்ச்சுவல் கியூ முறையை ஏற்றுக்கொள்ள முடியாது, இதுதொடர்பாக ஏற்கனவே அதிகமான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளது. இப்போது மேற்கொள்ளப்படும் தரிசன முறையே தொடரும் எனவும் பேசினார்.  

கடந்த மகரவிளக்கு காலத்தில் நாளொன்றுக்கு 4 லட்சம் பக்தர்கள் வரை வந்து சென்றிருக்கும் நிலையில், இதை வெறும் 20 ஆயிரம் அல்லது 30 ஆயிரமாக எப்படி குறைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய பத்மகுமார், இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் தேவசம்போர்டே எடுக்கும் எனவும், கோவில் நலனில் பிறர் தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்றும் குறிப்பிட்டார். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் போர்கால அடிப்படையில் முன்னெடுப்போம் எனவும் கூறியுள்ளார் பத்மகுமார். 


Next Story