என்னுடைய ரத்தத்தை குடிக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு தாகம் - சிவராஜ் சிங் சவுகான் சொல்கிறார்
வாகனம் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸை சாடியுள்ள சிவராஜ் சிங் சவுகான், என்னுடைய ரத்தத்தை குடிக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு தாகம் என குற்றம் சாட்டியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேருந்தில் தனது பிரச்சார யாத்திரையை மேற்கொண்டுள்ளார். சர்கட் தொகுதியில் அவரது வாகனம் சென்றபோது, அவருக்கு எதிராக சிலர் முழக்கங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மர்ம நபர்கள், முதல்வரின் வாகனம் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் சவுகான் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான அஜய் சிங்கின் தொகுதியில் முதலமைச்சரை தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு அக்கட்சியின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை, வன்முறை கலாச்சாரத்தை காங்கிரஸ் பின்பற்றாது என்றார் அஜய் சிங்.
இந்நிலையில் வாகனம் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸை சாடியுள்ள சிவராஜ் சிங் சவுகான், என்னுடைய ரத்தத்தை குடிக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு தாகம் என குற்றம் சாட்டியுள்ளார். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், “என்னுடைய ரத்தத்தை குடிக்க வேண்டும் என்ற தாகம் காங்கிரசிடம் உள்ளது. மத்திய பிரதேச அரசியல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் கிடையாது. அவர்கள் கொள்கையின் அடிப்படையில் மோத வேண்டும். அரசியல் கட்சிகள் அவர்கள் கொள்கையின் அடிப்படையிலான நிகழ்ச்சியை மேற்கொள்வார்கள், இதுபோன்று (கல்வீச்சு) நடந்தது கிடையாது,” என கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையையும் விமர்சனம் செய்துள்ளார்.
Related Tags :
Next Story