மாவட்ட எஸ்.பியான மகளுக்கு டிஎஸ்பியான தந்தை ''சல்யூட்'' அடித்த சம்பவம் தெலுங்கனாவில் ருசிகரம்


மாவட்ட எஸ்.பியான மகளுக்கு  டிஎஸ்பியான தந்தை சல்யூட் அடித்த சம்பவம் தெலுங்கனாவில் ருசிகரம்
x
தினத்தந்தி 3 Sept 2018 9:13 PM IST (Updated: 3 Sept 2018 9:13 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மகளுக்கு துணைக் காவல் ஆணையரான அவரது தந்தை சல்யூட் அடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் மல்காஜ்கிரி என்ற பகுதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரா சர்மா. இவர் சப் - இன்ஸ்பெக்டராக போலீஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 30 ஆண்டுகளாக போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் டி.எஸ்.பி.ஆக பதவி உயர்வு பெற்றார். தற்போது டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

இவரது மகள் சிந்து சர்மா. கடந்த  2014-ம் ஆண்டு ஐ.பி.எஸ்.  பணியில் சேர்ந்து  தற்போது தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார்.  இந்தநிலையில்  நேற்று ( செப்டம்பர் 2-ம் தேதி)  ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பொது கூட்டம் நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு பணியில் தந்தையும், மகளும் ஈடுபட்டனர்.   அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வந்த சிந்து சர்மா தந்தை பாதுகாப்பு பணியில் இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.  அப்போது பாதுகாப்பு ஏற்பாட்டில் முதன் முறையாக சந்திக்க நேர்ந்தது.  

சிந்து சர்மா உயர் அதிகாரி என்பதால், உமாமகேஸ்வரா சர்மா மகள் என்று கூட பார்க்காமல்  கம்பீரமாக சல்யூட் அடித்தார்.  இதனை  பார்த்த மற்ற காவல்துறை அதிகாரிகளும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 

இது குறித்து உமா மகேஸ்வரா சர்மா கூறுகையில், 

பணியில் இருக்கும் போது நாங்கள் இரண்டு பேரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டது இதுவே முதல் முறை. அவர் எனக்கு உயர் அதிகாரி எனவே நேரில் பார்த்த போது சல்யூட் அடித்தேன். வீட்டில்  தாங்கள் வழக்கமான அப்பா-மகள் தான் என்று கூறினார். 

சிந்து சர்மா கூறுகையில்,

ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பொது கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தேன். தந்தையுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் நல்ல தருணம் என தெரிவித்தார்.

Next Story