பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மனுவை உடனடியாக விசாரிக்க  சுப்ரீம் கோர்ட் மறுப்பு
x
தினத்தந்தி 4 Sept 2018 4:49 PM IST (Updated: 4 Sept 2018 4:49 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

புதுடெல்லி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழக அரசு உத்தரவின்பேரில், மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, வேதாந்தா குழுமம் சார்பில், டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், அதேநேரத்தில் எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.

இந்த குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்றுக் கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை அவசர வழக்காக கருதி நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் , வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

Next Story