நாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் தரமானது அல்ல விலங்குகள் நல வாரியம் அதிர்ச்சி தகவல்
நாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் தரமானது அல்ல என்று விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
லூதியானா,
மனிதர்களின் அன்றாட உணவுப் பொருள் பட்டியலில் முதலிடம் வகிப்பது பால் ஆகும். வளரும் குழந்தைகளுக்கு மாட்டுப் பால் முக்கிய ஆகாரமாக உள்ளது. பாலை நேரடியாகவோ அல்லது டீ, காபியுடன் சேர்த்தோ அருந்தாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் நாம் அருந்தும் பாலில் 68.7 சதவீதம் தரமானது அல்ல என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுபற்றி இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்கின்றனர்.
மேலும் பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றையும் கலக்கின்றனர். இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.
பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025–ம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story