இந்திய-அமெரிக்க அமைச்சர்களிடையே இன்று பேச்சுவார்த்தை: பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு


இந்திய-அமெரிக்க அமைச்சர்களிடையே இன்று பேச்சுவார்த்தை: பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 6 Sept 2018 7:31 AM IST (Updated: 6 Sept 2018 7:31 AM IST)
t-max-icont-min-icon

இந்திய-அமெரிக்க அமைச்சர்களிடையே இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

புதுடெல்லி,’

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டன. இதனைத் தொடர்ந்து, முதலாவது பேச்சுவார்த்தை  டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், இரு நாடுகளின் சார்பாக தலா 12 அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாட்டு அமைச்சர்களுக்கிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்பாக, இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வியாழக்கிழமை காலை தனித்தனியாக சந்தித்துப் பேச உள்ளனர். இதன் பிறகு மதிய வேளையில் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளனர்

அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் உறவை வலிமைப்படுத்துவது குறித்தும் முதன்மையாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இரு நாடுகளுக்கிடையே வணிகத்தை மேம்படுத்துவது குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான கொள்கைகள் குறித்தும், ஹெச்1பி; விசா தொடர்பாக டிரம்ப் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கெடுபிடியான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.


Next Story