பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மக்களிடம் இருந்து ரூ.11 லட்சம் கோடி கொள்ளை - காங்கிரஸ்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மக்களிடம் இருந்து ரூ.11 லட்சம் கோடி கொள்ளை - காங்கிரஸ்
x
தினத்தந்தி 6 Sep 2018 3:18 PM GMT (Updated: 6 Sep 2018 3:35 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக 10–ந்தேதி நாடுதழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.


புதுடெல்லி, 

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை சில சமயங்களில் குறைக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்த்தப்பட்டே வருகிறது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலர்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக பிற பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. 

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தால், விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக 10–ந்தேதி நாடுதழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விலை உயர்வு மூலம் மக்களிடம் இருந்து ரூ.11 லட்சம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இதை மக்களிடையே தெரியப்படுத்தவும், மத்திய உற்பத்தி வரியையும், மாநில ‘வாட்’ வரியையும் குறைக்க வலியுறுத்தியும் 10–ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும்.

 அதன்மூலம், சாதாரண மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 

Next Story