தேசிய செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான வன்கொடுமை பிரச்சினை: மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க முடியாது + "||" + The bill can not be banned by the federal government - supreme court

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான வன்கொடுமை பிரச்சினை: மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க முடியாது

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான வன்கொடுமை பிரச்சினை: மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க முடியாது
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவி அரசு ஊழியர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மீது புகார் கொடுத்த உடனேயே அவர்களை கைது செய்யக் கூடாது, உரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்பே கைது நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று உத்தரவிட்டது.


சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போய்விடும் என்று அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு இந்த வன்கொடுமை சட்டத்தை வலுப்படுத்தும் விதமாக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து கடந்த மாதம் 9-ந் தேதி நிறைவேற்றியது.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் பிரிதிவி ராஜ் சவுகான், இந்த வழக்கு முடியும் வரையிலாவது புதிய சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு, “நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. சில குறைபாடுகளை நீக்காமல் மத்திய அரசு இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது என்பதை நாங்களும் அறிவோம்” என்று கருத்து தெரிவித்தனர்.

பின்பு, இது தொடர்பாக மத்திய அரசு 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.