மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உண்ணா விரதத்தை தொடரும் ஹர்திக் படேல்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உண்ணா விரதத்தை தொடரும் ஹர்திக் படேல்
x
தினத்தந்தி 8 Sep 2018 2:05 PM GMT (Updated: 8 Sep 2018 2:05 PM GMT)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் ஹர்திக் படேல் உண்ணா விரத போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆமதாபாத், 

குஜராத் மாநிலத்தில் பதிதார் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘பதிதார் அனன்மத் அந்தோலன் சமிதி’ தலைவர் ஹர்திக் படேல், ஆமதாபாத்தில், கடந்த மாதம் 25-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஆனால், அவருடன் குஜராத் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

நேற்று முன்தினம் மாலையில் இருந்து ஹர்திக் படேல் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தி விட்டார். இந்நிலையில், நேற்று 14-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து, பதிதார் சமூக மூத்த தலைவர் நரேஷ் படேல் வேண்டுகோளை ஏற்று, ஹர்திக் படேல் ஆஸ்பத்திரிக்கு செல்ல சம்மதித்தார்.பின்னர், அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் ஹர்திக்படேல், தனது உண்ணா விரதத்தை தொடர்ந்து வருகிறார். இருப்பினும், தற்போது திரவ உணவுகளை எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் படேலை, சரத்பவார் ஆ.ராசா, ஆகியோர் சந்தித்து  பேசினர். 

Next Story