கன்னியாஸ்திரியை விபசாரி என கூறிய கேரள எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் முடிவு


கன்னியாஸ்திரியை விபசாரி என கூறிய கேரள எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் முடிவு
x
தினத்தந்தி 9 Sep 2018 7:46 AM GMT (Updated: 9 Sep 2018 7:46 AM GMT)

கேரளாவில் பாதிரியார் மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரியை விபசாரி என கூறிய எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் 46 வயது நிறைந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் நகரை சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முல்லக்கால் தன்னை 13 முறை கற்பழித்து உள்ளார் என பரபரப்பு புகார் கூறினார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்கள் ஆகியும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய ஹாஸ்டலில் உள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாதிரியார் பிராங்கோ மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரியை விபசாரி என கேரளாவின் பூஞ்சார் தொகுதியை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அந்த கன்னியாஸ்திரி விபசாரி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா? 12 முறை அவருக்கு சுகம் ஆக இருந்துள்ளது.  13வது முறை அது கற்பழிப்பு ஆகியுள்ளது? 12 முறை நடந்தபொழுது அவர் எங்கே இருந்தார்? யாருக்காக இதனை அவர் கூறுகிறார்? முதல்முறை கற்பழிப்பு நடந்தபொழுது அவர் ஏன் புகார் அளிக்கவில்லை? என கேள்வி கேட்டுள்ளார்.

இந்த நிலையில், சர்ச்சையாக பேசி உணர்வுகளை புண்படுத்தியதற்காக எம்.எல்.ஏ. ஜார்ஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்குவோம் என கன்னியாஸ்திரியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்பொழுது, ஊடகங்களை இன்று முதல் முறையாக சந்திக்க கன்னியாஸ்திரி விரும்பினார்.  ஆனால், ஜார்ஜின் சர்ச்சை பேச்சுகளை அடுத்து அறையை பூட்டி கொண்டு அவர் மணி கணக்கில் உள்ளே இருக்கிறார்.  யாரையும் சந்திக்க மறுக்கிறார்.  தொலைபேசி அழைப்புகளை தவிர்க்கிறார்.  அவர் அதிக வருத்தமடைந்து உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு கேரள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு காரில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஜார்ஜுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.


Next Story