2019-ல் வெற்றி பெறுவோம், 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம் - அமித்ஷா பேச்சு


2019-ல் வெற்றி பெறுவோம், 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம் - அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 9 Sep 2018 1:08 PM GMT (Updated: 9 Sep 2018 1:08 PM GMT)

2019 பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.


புதுடெல்லி,


பா.ஜனதாவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை அடுத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார். ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2019 பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றிப்பெறும். 2019 தேர்தல் வெற்றியை அடுத்து அடுத்த 50 ஆண்டுகள் யாராலும் பா.ஜனதாவை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாது. இதனை நாங்கள் பெருமைக்காக சொல்லவில்லை, எங்களுடைய பணியின் அடிப்படையில் சொல்கிறோம் என்றார் என குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில், 2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று  மீண்டும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கால் அரசியல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளிடம் தலைவரும் கிடையாது. கொள்கையும் கிடையாது. பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் திட்டம் ஒரு பகல் கனவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பா.ஜனதா அரசால் கடந்த 4 ஆண்டுகள் அதிகமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022க்குள் புதிய இந்தியா உருவாக்கப்படும். பா.ஜனதா அரசிடம் தொலைநோக்கு பார்வை, ஆர்வம் உள்ளது, இந்த அரசின் செயல்பாட்டை பார்க்க முடியும். 2022-க்குள் இந்தியாவில் பயங்கரவாதம் இருக்காது, ஜாதியம் மற்றும் வகுப்புவாதம் இருக்காது, யாரும் வீடு இல்லாமல் இருக்க மாட்டார்கள்,” என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை குறிப்பிட்டு கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில், எதிர்க்கட்சிகளிடம் எந்த கொள்கையும் கிடையாது, திட்டமும் கிடையாது, வியூகமும் கிடையாது என கூறப்பட்டுள்ளது.

 எதிர்க்கட்சிகளின் ஒரே நிகழ்ச்சி நிரல் பிரதமர் மோடியை நிறுத்த வேண்டும் என்பது மட்டும்தான் என கூறியுள்ளார் ஜவடேகர். 

Next Story