பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க தேவையான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது - தேவேந்திர பட்னாவிஸ்


பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க தேவையான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது - தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 9 Sep 2018 3:42 PM GMT (Updated: 9 Sep 2018 3:42 PM GMT)

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க தேவையான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். #DevendraFadnavis

மும்பை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10–ந்தேதி) நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இந்தநிலையில், பெட்ரோல்-டீசல்  விலையை குறைக்க தேவையான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டு வருவதாக மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

பெட்ரோல்-டீசல் விலைகள் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆகையால் எரிபொருட்களின் விலையை குறைக்க தேவையான அனைத்து முயற்சிகளிலும் மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது.

எரிபொருளின் விலையை குறைக்க சிறந்த வழி, அதை ஜிஎஸ்டி கீழ் கொண்டுவருவதுதான்.  இதை ஜிஎஸ்டி கவுன்சிலில் கொண்டுவந்தால், அதை மராட்டிய அரசு ஆதரிக்கும்.  மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து முதல் 3 வருடங்களில் 13 முறை பெட்ரோலின் விலையை குறைத்து உள்ளது. சர்வதேச சந்தையை சார்ந்து தான் எண்ணெய் விலை அமையும் என்பதை மக்கள் நன்கு அறிவர். ஆனால் இப்பொழுது சந்தயில் விலை உயரந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது என்று காங்கிரசும் அதன் நண்பர்களும் பெரிதும் கவலைப்படுகிறார்கள்.  அவர்கள் கவலையைப் போக்க எளிய வழி ஒன்று உள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாகவோ அதன் நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆளும் மாநிலங்களில் மாநில வரிகளை முழுக்க ரத்து செய்தால் பெட்ரோல், டீசல் விலை தானாகக் குறைந்து விடும் செய்வார்களா? செய்யமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அரசியலுக்காகதான் கவலைப் படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story