திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் எடுத்து சென்ற உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் எடுத்து சென்ற உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Sep 2018 10:15 PM GMT (Updated: 9 Sep 2018 9:50 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் நடந்து வருகின்றன.

திருமலை,

அதேபோல் நேற்று முன்தினம் மாலை சகஸ்ரதீப அலங்கார சேவை நடந்தது. இந்த சேவை முடிந்ததும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியின் சிலைகளை கோவில் அர்ச்சகர்கள் கருவறைக்குள் கொண்டு சென்றனர்.

ஒரு அர்ச்சகர் உற்சவர் மலையப்பசாமியை கொண்டு சென்றார். எதிர்பாராத விதமாக அர்ச்சகர் கால் தடுமாறி திடீரென கீழே விழுந்து விட்டார். அதில் அவர் கையில் வைத்திருந்த உற்சவர் மலையப்பசாமியின் சிலையும் கீழே விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மற்ற அர்ச்சகர்கள் உடனடியாக வந்து மலையப்பசாமியின் சிலையை எடுத்தனர். அதைத் தொடர்ந்து சிலை கீழே விழுந்ததற்கு பரிகாரமாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமியின் சிலை கீழே விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story