ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு மத்திய அரசு கடிதம்


ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு மத்திய அரசு கடிதம்
x
தினத்தந்தி 9 Sep 2018 11:30 PM GMT (Updated: 9 Sep 2018 10:50 PM GMT)

வழக்குகள் தேங்குவதை தடுக்க கீழ்க்கோர்ட்டுகளுக்கு விரைவில் நீதிபதிகளை தேர்வு செய்யுங்கள் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள 24 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதி உள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:–

நாடு முழுவதும் மாவட்ட மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் மொத்தம் 2 கோடியே 76 லட்சத்து 74 ஆயிரத்து 499 வழக்குகள் தேங்கி உள்ளன.

வழக்குகள் தேக்கத்துக்கான முக்கிய காரணம், நீதிபதிகள் காலியிடமும், அதை நிரப்புவதற்கு ஏற்படும் தாமதமுமே ஆகும். மாவட்ட மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 2013–ம் ஆண்டு 19 ஆயிரத்து 518 ஆக இருந்தது.

இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 444 ஆக உயர்ந்து விட்டது. ஆனால், பணியாற்றும் நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. ஜூன் மாத நிலவரப்படி, 17 ஆயிரத்து 221 நீதிபதிகள்தான் பணியாற்றி வருகிறார்கள். எனவே, 5 ஆயிரத்து 223 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலியிடங்களை நிரப்ப ஐகோர்ட்டுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும், காலியிடங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, காலியிட நிலவரத்தை தலைமை நீதிபதிகள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு வகுத்த கால அட்டவணைப்படி, உரிய நேரத்தில் நீதிபதிகள் தேர்வும், நேர்முக தேர்வும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


Next Story