தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானங்களை வாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் + "||" + The Central Government intensifies efforts to purchase Rafael fighter aircraft

ரபேல் போர் விமானங்களை வாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்

ரபேல் போர் விமானங்களை வாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்
காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் ரபேல் போர் விமானங்களை வாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் ‘தசால்த்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் மோடி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தம் கையெழுத்தான 36–வது மாதம் தொடங்கி 67–வது மாதத்துக்குள் போர் விமானங்களை ஒப்படைக்கும் பணி நிறைவடையும்.

மேலும் இந்திய விமானப்படைக்கு தகுந்த வகையில் ரபேல் போர் விமானத்தின் வடிவமைப்பில் பல்வேறு மாறுதல்களை செய்து வழங்குவதற்கும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவும், பிரான்சும் செய்துகொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் காங்கிரஸ் இதில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து உள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இதை மோடி அரசு மறுத்துள்ளது.

இந்த நிலையில் ரபேல் போர் விமானங்களை பிரான்சில் இருந்து வாங்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஓசையின்றி அதே நேரம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ரபேல் போர் விமானங்களுக்கு இந்தியாவின் அம்பாலா மற்றும் ஹசிமாரா ஆகிய விமானப்படைத் தளங்களில் தேவைப்படும் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை இந்திய விமானப்படை மேற்கொண்டு உள்ளது.

மேலும், ரபேல் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள இந்த ஆண்டின் இறுதியில் இந்திய விமானப்படை விமானிகள் பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஏற்கனவே இந்த விமானங்களை இயக்குவதற்கு பிரான்ஸ் நிறுவனம் இந்திய விமானிகளுக்கு பயிற்சியளித்து உள்ள நிலையில் விமானிகள் மீண்டும் பிரான்ஸ் செல்கின்றனர்.

இது தொடர்பாக இந்திய விமானப்படை அதிகாரிகள் குழு அண்மையில் பிரான்ஸ் சென்று தசால்த் நிறுவனத்தில் ஆய்வும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.