தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றி பெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் பேச்சு + "||" + PM Speech at National Executive Meeting

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றி பெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றி பெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் பேச்சு
‘எதிர்க்கட்சிகள் எங்களுக்கு சவால் அல்ல, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்று கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. நிறைவு நாளான நேற்று, கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நேற்றைய கூட்டத்திலும் மறைந்த பிரதமர் வாஜ்பாயின் சாதனைகள் பெரிதும் நினைவு கூரப்பட்டது.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான உத்திகள் குறித்த ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அதில், ஒரு அணியாக சேர முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு எந்த குறிக்கோளும் கிடையாது. அவர்களுக்கு தொலைநோக்கு பார்வையும் இல்லை. தலைவரோ, கொள்கையோ கிடையாது என்று கூறப்பட்டு இருந்தது.

பின்னர் இதன் மீது பேசிய ராஜ்நாத் சிங், ‘‘கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், வறுமையை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் திட்டங்கள் பாராட்டுக்குரியவை. 2022–ல் புதிய இந்தியா முற்றிலும் ஊழல், பயங்கரவாதம், சாதி, மத பாகுபாடு, வறுமை இல்லாத நாடு என்ற நிலையை அடையும். அப்போது நாடு முழுவதும் தாமரை மலரும்’’ என்றார்.

செயற்குழுவில் தலைவர் அமித்ஷா பேசுகையில், ‘‘2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்மை ஆட்சியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது. நிச்சயம் நாம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

48 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரசின் செயல்பாட்டுடன் எங்களின் 48 மாத நிர்வாகம் குறித்து விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். 48 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி ஒரு குடும்பத்துக்காக மட்டுமே சேவை செய்தது. இந்த கால கட்டங்களில் யாருடைய ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தது என்பது பற்றி காங்கிரஸ் விவாதம் நடத்துவதற்கு தயாரா?...

தற்போது எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியலை மேற்கொண்டு வருகின்றன. அரசு நிர்வாகத்தில் யார் தோல்வி கண்டார்களோ (காங்கிரஸ்) அவர்கள் தற்போது எதிர்க்கட்சி என்ற நிலையிலும் தோல்வி கண்டு உள்ளனர். எதிர்க்கட்சிகள் உருப்படியான எந்த பிரச்சினைகளையும் எழுப்பவில்லை.

நம்மிடம் கொள்கைகளும் உண்டு. உத்திகளும் இருக்கின்றன. கொள்கைகளுக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். அதில் நாம் உறுதியாகவும் இருக்கிறோம்.

நாட்டு மக்களிடம் பா.ஜனதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைப் பொறுக்காமல்தான் கட்சிகளும், சிலரும் ஒன்றாக அணி சேர்ந்து இருக்கின்றனர். வருகிற தேர்தலில் நம்முடைய அடிப்படை பணிகள் மற்றும் சிந்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளை சந்திப்போம்.

சிறிய கட்சிகள் கூட காங்கிரசின் தலைமையை ஏற்க முன்வரவில்லை. மேலும் காங்கிரஸ் தலைமை எதிர்க்கட்சிகளுக்கு வலிமை சேர்க்காது என்பதையும் அந்த கட்சிகள் உணர்ந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு எதிர்க்கட்சிகள் சவால் அல்ல. 2019 பொதுத் தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெறும். நம்பிக்கையின் அடிப்படையில் எங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். நாட்டின் 125 கோடி மக்களின் நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.

வெல்ல முடியாத இந்தியா, வாஜ்பாயின் உறுதியான பா.ஜனதா என்ற கோ‌ஷத்தை அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் முன்வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடியின் பேச்சு விவரங்களை செயற்குழு கூட்டம் முடிந்ததும், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த 4½ ஆண்டுகளில் மோடி அரசு சிறந்த நிர்வாகத்தை வெளிப்படுத்தி வருகிறது என்ற பொதுவான எண்ணம் மக்களிடம் உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களையும் மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. எனவே 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் அபார வெற்றி பெறும். 2014–ம் ஆண்டில் கைப்பற்றிய இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பா.ஜனதா அரசு திரும்பப் பெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மத்திய அரசின் இந்த முடிவில் எந்த மாற்றமும் கிடையாது. எல்லாவற்றுக்கும் இணக்கமாகவே சமுதாயத்தை எடுத்துச்செல்ல விரும்புகிறோம். அனைவரும் ஒருங்கிணைவோம்; வளர்ச்சி காண்போம் என்பதுதான் பா.ஜனதாவின் தாரக மந்திரம்.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண முன்னோக்கிய நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. இதற்கான கொள்கையை மத்திய அரசு வகுக்கும். மோடி அரசின் 4 ஆண்டு கால ஆட்சி பற்றி நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரசின் செயல்திறன் என்ன?... ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பணவீக்கம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. மக்கள் அப்போது மிகவும் துயரத்துக்கு உள்ளானார்கள்.

பிராந்திய கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிப்பது அபத்தமானது. ஆட்சியை கைப்பற்றலாம் என்று எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன. அவர்களின் ஒரே நோக்கம் பிரதமர் மோடியை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.