மாயமான பிரபல தனியார் வங்கியின் துணைத்தலைவர் சடலமாக மீட்பு


மாயமான பிரபல தனியார் வங்கியின் துணைத்தலைவர் சடலமாக மீட்பு
x
தினத்தந்தி 10 Sep 2018 6:10 AM GMT (Updated: 10 Sep 2018 6:10 AM GMT)

மர்மமான முறையில் மாயமான எச்.டி.எஃப்.சி. வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வி இன்று காலை கல்யான் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். #HDFCVicePresident

மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்.டி.எஃப்.சி. வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வி (39) கடந்த 5-ந் தேதி மர்மமான முறையில் மாயமானார். மும்பையிலுள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் வங்கி அலுவலகத்திற்கு சென்ற சித்தார்த் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ஜோஷி மார்க் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனிடையே எச்.டி.எஃப்.சி. வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வி மாயமானது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் ஐரோலி பகுதியில் அவரது காரை கண்டெடுத்தனர். காரின் இருக்கையில் கத்தியும், இரத்தக்கறைகள் படிந்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், இரத்தத்தை பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பினர்.சங்வி காணாமல் போன சில நேரங்களிலேயே அவரது மொபைல் போன் நவிமும்பை அருகே சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். அதேபோல், சங்வி தனது அலுவலகத்திலிருந்து 7.30 மணியளவில் காரிலிருந்து வெளியேறிய காட்சியானது சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து மும்பை, தானே, நவிமும்பை ஆகிய நகரங்களில் உள்ள அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் இன்று காலை கல்யான் பகுதியில் சித்தார்த் சங்வி, போலீசாரால் சடலமாக மீட்கப்பட்டார். சங்வி மரணம் தொடர்பாக 20 வயதுள்ள கார் ஓட்டுனரை கைது செய்துள்ள போலீசார், சங்வி கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனவும், மேலும் இக்கொலை சம்பவத்தில் பெண் உட்பட 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். சங்வி சமீபத்தில் பதவி உயர்வு பெற்றதாலும், தொழில்முறை போட்டியால் இந்த கொலை நடைபெற்றிருப்பதாகவும் கூறிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்தனர். கொலையுண்ட சித்தார்த் சங்வி, மலபார் ஹீல் பகுதியில் தனது மனைவி மற்றும் 8 வயது மகனுடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story